Friday, 7 November 2014

ஜாதி மறுப்பு திருமனம் புரிந்தவர்களுக்கு பாதுகாப்பு இல்லை

சீனிவாசன் - பிரதிபா ஜோடிக்கு திருமணமானது 2012 அக்டோபரில். ஒடிஷாவில் வாழ்ந்த அவர்களை ஆட்கொணர்வு மனு ஒன்றைப் போட்டு பிரதிபாவின் பெற்றோர் சென்ற வாரம் மதுரை நீதிமன்றத்துக்கு வரவத்தனர். தர்மபுரி திவ்யாவைப் போலவே  பிரதிபா கணவனுடன் தான் இருப்பேன் என்று கூறிவிட, நீதிமன்றம் பிரதிபாவின் பெற்றோரிடம் தம்பதியின் வாழ்க்கையில் தலையிடக்கூடாது என்று உத்தரவிட்டு அனுப்பினர். திவ்யா வழக்கை நீட்டித்தது போல் நீட்டிக்காமல் உடனடியாக தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

காதல் திருமணங்கள் தமிழ்நாட்டுக்குப் புதிதல்ல. ஆனால் அண்மைக் காலமாக காதலர்களும், புதுமண தம்பதிகளும் நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டிருக்கிறார்கள். தனிமனித உணர்வான காதலையும், மண வாழ்க்கையையும் காப்பாற்றிக்கொள்ள சட்டத்தையும், காவல்துறையையும், நீதிமன்றங்களையும் எதிர்நோக்கி இருக்கும் அவல நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டிருக்கிறது. பெண்ணின் வீட்டிலிருந்து ஆட்கொணர்வு மனு போடுவதும் பெண் நீதிமன்றத்தில் வந்து ஆஜராவதும் காதலர்கள் காவல்துறையில் பாதுகாப்பு கோருவதும் சர்வசாதாரண காட்சிகளாகிவிட்டன. 

தனிமனித உணர்வில் நீதிமன்றத்தின் தலையீடு கட்டாயம் என்று உண்டாக்கப்பட்டிருக்கும் இந்தச் சூழல் ஆரோக்கியமானதுதானா?  காதல் இப்போது தன்னைக் காப்பாற்றிக்கொள்ள நீதிதேவதையின் கட்டப்பட்ட கண்களுக்குள்ளாக ஒளியைத் தேடிக்கொண்டிருக்கிறது.  இப்போது சேரனின் மகள் தாமினி விஷயமும் நீதிமன்றத்தில் உள்ளது. 18 வயதுக்குட்பட்ட காதலர்கள் தொடர்பான வழக்குகளை நீதிமன்றம் கையாளலாம்; ஆனால் 18 வயதிற்கு மேற்பட்டவர்களின் காதல் குறித்த வழக்குகளை நீதிமன்றம் இனி எடுக்கப்போவதில்லை என்று அறிவிப்பது நல்லது என்கிறார் அஜிதா. ‘’ஒரு பெண் காதலிக்கட்டுமே என்ன தவறு என்று பெற்றோரும் விடுவதில்லை. ஆறு மாதமோ, ஒரு வருடமோ கழிந்தால் அவன் சரியானவனா என்று அவளே கணிப்பாள். ஆனால் அதற்கு வாய்ப்பு தராமல் ‘நீங்கள் இருவரும் பேசக்கூடாது’’ என்று தடைவிதிப்பது சரியல்ல. அதுதான் பிரச்சனையை சிக்கலாக்கும். ஒருவனையே காதலிக்கவேண்டும், அவனையே கைபிடிக்கவேண்டும், கற்போடு இருக்கவேண்டும் என்கிற கருத்தின் அடிப்படையிலேயே பெண் காதலித்தால் பதறுகிறார்கள்.அவளுக்கு ஒரு காதலுக்கு மேல் வர வாய்ப்பில்லை என்று அவர்களாகவே முடிவு செய்துகொள்கிறார்கள். எல்லா பிரச்சனைகளும் இதிலிருந்துதான் துவங்குகின்றன’’ என்கிறார் அஜிதா.

இளவரசன் - திவ்யா விவகாரத்துக்குப் பின் மட்டும் தமிழகத்தில் பல காதல்கள் நீதிமன்றத்துகு வந்திருக்கின்றன. அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தமிழ்ச் செல்வி - விமல்ராஜ் தம்பதி தங்கள் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு தஞ்சை காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.  கடலூரை சேர்ந்த சௌமியா - அம்பேத்ராஜன் தம்பதி, விழுப்புரம் மாவட்டம் பள்ளிப்புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கனிமொழி - வேல்முருகன் தம்பதியும், நீடாமங்கலத்தைச் சேர்ந்த கீதா - ராமச்சந்திரன் தம்பதியும் பாதுகாப்பு கேட்டு காவல்துறையை நாடியவர்கள். இவை எல்லாமே இளவரசன் - திவ்யா பிரிவுக்குப் பின்னர் நிகழ்ந்தவை. தர்மபுரி மாவட்டம் வேப்பமரத்தூரு சுரேஷ் - சுதா தம்பதிக்கு வித்தியாசமான பிரச்சனை. மணமாகி ஒரு குழந்தையும் ஆனபின் ஊரில் உள்ள சாதி பஞ்சாயத்தில் சுதாவின் சாதிச் சான்றிதழைக் கேட்டிருக்கிறார்கள். தர மறுத்திருக்கிறார் சுரேஷ். சுதா ஒரு தலித் என்கிற தகவலை வேறு வழிகளில் பெற்றுக்கொண்டவர்கள் இவர்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்திருக்கின்றனர். இப்போது பாதுகாப்பு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கின்றனர். 

‘’சாதிய உணர்வு கொண்டவர்கள் முன்பு அடக்கி வாசித்தார்கள். இப்போது ராமதாஸ் போன்றவர்கள் கொடுத்த தைரியத்தில் மிக வெளிப்படையாக தங்கள் சாதிய உணர்வை முன்னிறுத்துகிறார்கள். சாதி பஞ்சாயத்துக்களை கட்டுப்படுத்தும் சட்டம் உடனடியாக நடைமுறைக்கு வரவேண்டும். அப்போதுதான் அச்சம் இருக்கும். இப்போது ராமதாஸ் மீது அரசு நடவடிக்கை எடுத்ததால், சாதியவாதிகள் வெளிப்படையான செயல்பாடுகளில் ஈடுபடாமல் தம்பதிகளை அச்சுறுத்துவது போன்ற ரகசிய செயல்பாடுகளில் ஈடுபடுவதைக் காண முடிகிறது. இப்படி சாதி மறுப்பு மணம் புரிந்தவர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதும் நீதிமன்றம், காவல்துறை தலையிட வேண்டியிருப்பதும் வருந்தத்தக்க நிலைதான். நம் சமூகத்தை 50 ஆண்டுகள் பின்னிழுத்துச் சென்றது போல் உள்ளது’’ என்கிறார் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி.

                                                                                             - கோகுலகண்ணன்

Tuesday, 14 February 2012

காதலர் தின வாழ்த்துக்கள்

இளைஞர்களே ! காதல் செய்யுங்கள் ! ஆனால்

அந்தக்காதல் ஜாதி மறுப்பாக இருக்கட்டும் !

உணர்வுகளின் உந்துதலாக இருக்க வேண்டாம் !

அறிவுபூர்வமான உணர்வின் அடிப்படையில் அமையட்டும் !

காதலர் தினம் - ஜாதி மறுப்பு தினமாக மலர

காதல் இணையர்களை வாழ்த்துகிறோம் !

காதலர்நாளை பயமின்றி கொண்டாடுங்கள்

காதலர்நாளில் பொதுஇடங்களில் காணும் இணையர்களை இந்துமதவாத மற்றும் கலாச்சார பாதுகாவலர்களின் அச்சுறுத்தல்களிலிருந்து காக்க,
நமது பெரியார் திராவிடர் கழகத்தோழர்கள் 30க்கும் அதிகமானோர் மெரினா கடற்கரையில் உள்ளனர்.

ஆகவே காதலர்களே!
காதலர்நாளை பயமின்றி கொண்டாடுங்கள்.
வாழ்த்துகள்!

ஜாதிய கூட்டமைப்புகளை தடை செய்

கடந்த நவம்பர் மாதம், தருமபுரி மாவட்டத்தில், நத்தம், அண்ணாநகர், கொண்டாம்பட்டி ஆகிய கிராமங்களில் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புகள் மீது நடந்த கொடூரமான தாக்குதல் குறித்து அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் அக்கரையில்லாம் இருக்கும் சூழலில், சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில், 02-02-2013 சனிக்கிழமை அன்று காலை 10-00 மணி முதல் பிற்பகல் 2-30 மணி வரை, ‘தருமபுரி தாழ்த்தப்பட்டோர் கிராமங்கள் மீது நடைபெற்ற வன்முறையை வழிநடத்திய முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்’ என வலியுறுத்தி தொடர் முழக்கக் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
        தாக்குதலுக்கு உள்ளான நத்தம், அண்ணாநகர், கொண்டாம்பட்டி ஆகிய பகுதிகளைச் சார்ந்த ஊர் பொதுமக்களோடு இணைந்து தமிழ்நாடு மக்கள் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், சோசியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா, சி.பி.ஐ.எம்.எல்.மக்கள் விடுதலை, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் உட்பட பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த பொறுப்பாளர்கள் இதில் பங்கேற்றனர். இந்த ஆர்பாட்டத்தை அறிந்த ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ அவர்கள் தாமாக முன்வந்து கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
         முன்னதாக கண்டன ஆர்பாட்டத்தின் நோக்கம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, முக்கிய குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை, களவு போன பொருட்கள் எதுவும் மீட்கபடவில்லை அதோடு பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் மூலமாக  சமூக முன்னேற்றம் பெற்றுள்ள நமது நாட்டில் தலித் அல்லாதோர் இயக்கம் என்ற ஒரு அநியாயமான அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி நடத்திக்கொண்டிருப்பதற்கு எதிராக - அந்த ஜாதியவாதிகளுக்கு எதிராக இந்த ஆர்பாட்டம் நடக்கின்றது. சிலர் இரத்துசெய்ய வேண்டும் என்று சொல்லுகின்ற ‘வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை’ மேலும் வலுவாக்கவேண்டும் – சரியாக பயன்படுத்தவேண்டும், தலைமறைவாக இருப்பதாக சொல்லப்படுகிற முக்கிய குற்றவாளிகள் வெளிப்படையாகத்தான் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள் அவர்களை கைது செய்யவேண்டும், இந்த தாக்குதலுக்குக் காரணமாக இருந்த காடுவெட்டி குரு, இராமதாசு ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யவேண்டும் இராமதாசு, மணிகண்டன் போன்றோரால் நடத்தப்படும் கூட்டங்களை அரசு இரத்து செய்யவேண்டும் என்று தெரிவித்தார்.
       தொடர்ந்து நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்திற்கு கொண்டாம்பட்டி பகுதியைச் சார்ந்த காசியப்பன் தலைமை ஏற்றார். திராவிடர் விடுதலைக் கழக தலைமை நிலைய செயலாளர் தபசி.குமரன் வரவேற்புரை ஆற்றினார். தமிழ்நாடு மக்கள் கட்சி அருண்சோரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் தியாகு, வழக்கறிஞர் இரஜினிகாந்த், விடுதலை சிறுத்தைகள் வன்னிஅரசு, ஊடகவியாளர் கவின் மலர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி எஸ்.கே.மகேந்திரன், தமிழ்நாடு மக்கள் கட்சி selvi , ஆதித் தமிழர் பேரவை நீலவேந்தன் முதலானோர் தருமபுரி மாவட்டம் நத்தம், அண்ணாநகர், கொண்டாம்பட்டி ஆகிய பகுதிகளில் நடந்த கொடூர தாக்குதலை முன்வைத்து ஜாதிய தலைவர்கள் நடத்தும் கேவலமான அரசியலை பலபட தோழர்கள் விமர்சித்து பேசினார்கள்.

        இறுதியாக நிறைவுரை ஆற்றிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி தனது உரையில், உள்ள செய்திக்கு நேரடியாக வராமல் எங்கோ வளைத்து வளைத்து பேசுகிறார்கள். எரிக்கப்பட்ட இந்த நிகழ்வுக்கு பதில் கூற சொன்னால் நாடகக் காதல் என்று பேசுகிறார்கள். எரிப்பைப் பற்றி எந்த பேச்சும் இல்லை. எப்படி ஸ்டெய்ன்ஸ் எரிக்கப்பட்டபோது, எரிக்கப்பட்டதை பற்றி பேசாமல், ஒரிசாவின் மலைப் பகுதிகளில் கல்விப் பணியாற்றிய கிருத்துவ கன்னியர்கள் மீது பாலியல் வன்முறை நிகழ்ந்தபோது உடனே மதம் மாற்றம் பற்றி விரிந்த விவாதம் நடத்தப்படவேண்டும் என்று வாஜ்பாய் சொன்னாரோ, அதைப்போலத்தான் நம்முடைய தமிழ்நாட்டு மனுவாதிகள்  நாடகக் காதல் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார் என்று குறிப்பிட்டார். மேலும் நாடக காதலால் பணங்களை பறிக்கிறார்கள் என்று சொல்லுகின்ற இராமதாஸ் ஒரு விளக்கத்தை கொடுத்தாக வேண்டும், என்று கேட்டுக்கொண்ட கழகத் தலைவர், பணக்கார வன்னிய பெண்ணை காதலித்தால் பணத்திற்காக செய்கிறார் என்கிறீர்களே, ஏழை வன்னிய பெண்ணை ஒரு தாழ்த்தப்பட்ட தோழர் காதலித்தால் நீங்கள் அனுமதித்துவிடுவீர்களா? அதில் பணம் பறிக்கும் நோக்கம் இல்லை எனவே ஏற்றுக்கொள்வீர்களா? என்ற கேள்வியை எழுப்பினார்.  ஜாதியம் பேசி, ஏதோ ஜாதியின் பெயரால் அணிதிரட்டி அரசியலில் மீண்டும் நிமிர்ந்துவிட முடியும் என்று நினைக்கின்ற இந்த அரசியல்வாதிகளால், அடையாளம் தெரியாமல் இருந்த பல ஜாதி தலைவர்கள் இப்போது தான் அவர்களின் ஜாதியினருக்கு தெரியத் தொடங்கியிருக்கிறார்கள். மணிகண்டன் என்பரெல்லாம் இது வரை கொங்கு வேளாளர்கள் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை; இப்போது அவர் தலைவர் ஆகிவிட்டார். கரூர், நாமக்கல் பகுதிகளில் பெண் குழந்தைகளைக் கொன்றுவிடுகிறார்கள். அந்த ஜாதியில் பெண் குழந்தைகளே இல்லை. எனவே கேரளாவுக்கு சென்று பெண் தேடி,திருமணம் செய்கிறார்கள். கேரளாவில் பெண் பார்ப்பதற்கு என்றே தனி நிலையங்கள் கரூரில், நாமக்கல்லில் வைத்திருக்கிறார்கள். சில ஆண்டுகளில், கேரள பெண்களோடு ஏறத்தாழ இருநூறு முன்னூறு திருமணங்கள் நடந்துவிட்டன. அந்த கவுண்டர்களை நீங்கள் ஜாதியை விட்டு நீக்கிவிட்டீர்களா? இன்னும் ஜாதியிலேயே வைத்திருக்கிறீர்களா? என்ற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லாமல்தான் ஜாதி சங்கத்தை நடத்துகின்றார்கள் எப்படி இருந்தாலும், உடனடி தீர்வாக நாம் சில கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றோம். இந்த தாக்குதல்களில் ஈடுபட்டவர்களில் பெண்களும் இருந்திருக்கி.றார்கள்; குஜராத்தில் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்னால், பெண்களும் தாக்குதலில் ஈடுபட்டது என்பது இந்த தாக்குதலில் தான். இது வரை ஒரு பெண்ணும் கைது செய்யப்படவில்லை. வழக்கமாக, தேடப்படும் குற்றவாளிகள் என்ற பட்டியலை அரசு வெளியிடும்; ஆனால் கைது செய்யப்படவேண்டியவர்களின் பட்டியலை நாம் அரசுக்கு வெளியிட்டிருக்கின்றோம். எவ்வளவு கேவலம் அரசுக்கு? சிறையில் இருப்பவன் பேசிக்கொண்டிருக்கின்றான். வெளியூரில் இருந்து வந்து தாக்குதல் நடத்தியவர்களெல்லாம் தப்பிவிட்டார்கள் – சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருக்கின்றார்கள்; உள்ளூரில் இருந்த எங்களுக்கு மட்டும் தான் சிறையா என்று, பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் பக்கம் இருந்தே குரல் வந்து கொண்டிருக்கின்றது, ஆனால் அரசு ஏன் இப்படி நடந்து கொள்கிறது என்று தான் நமக்கு வியப்பாக இருக்கின்றது. என்றும் தனது உரையில் குறிப்பிட்டார்.

                                           - கோகுலகண்ணன்

கோவையில் காதலர் தினம்

14 - 2 - 2012 மாலை  கோவையில் காதலர் தின விழா

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் காதலர் கலைவிழா

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் காதலர் கலைவிழா. தொடர்ந்து சாதி மறுப்புக் காதல் திருமணங்களை நடத்திவைத்துக் கொண்டிருந்ததால் கோபமடைந்த ஒட்டன் சத்திரம் பகுதி ஆதிக்கசாதியினர் பெரியார் திராவிடர் கழகத் தோழர்களைக் கடந்த டிசம்பர் மாதம் கடுமையாகத் தாக்ககினர். சுமார் 300 பேர் கொண்ட கும்பலிடம் 10 பெரியார் தி.க தோழர்கள் சிக்கி பலத்த காயம் அடைந்தனர். அடித்த சாதி வெறிக்கும்பல் நிறைந்திருக்கும் அதே பகுதியில் தாக்கப்பட்ட தோழர்களுக்கு கருந்திணை சார்பில் பாராட்டுவிழா. காதலர் கலைவிழாவாக. அனைவரு்ம் வாரீர்!

Saturday, 24 September 2011

சாதி,மதம் ஒழிய காதல் திருமணம் செய்யுங்கள்! தனிமனித சுதந்திரம் காக்க காதலர் கழகத்தில் சேருங்கள்!


          சாதி,மதம் ஒழிய காதல் திருமணம் 
                                                                          செய்யுங்கள்! 

   தனிமனித சுதந்திரம் காக்க காதலர் கழகத்தில்
                                                                               சேருங்கள்!


            தமிழ்நாடு காதலர் கழகம் துவக்கமும் அவசியமும்

    நாம் விரும்பிய ஒருவர், நம்மை விரும்பவில்லை என்றாலே நமக்கு வேதனையாக இருக்கும் போது, இருவரும் ஒருவருக்கொருவர் விரும்பிய பிறகு, பெற்றோர்களாளோ, மற்ற காரணங்களாளோ இணைய முடியாதபோது அவர்களுக்கு எவ்வளவு வேதனையாக இருக்கும்? இருவரும் ஒருவருக்கொருவர் விரும்புகிறபோது, அவர்களுக்கு எந்தவகையான இடையூறு வந்தாலும் அதை முறியடித்து, அவர்கள் வாழ்வில் இணைய உதவுவதற்காக நாம் ஒன்றிணைய வேண்டும்.

                      உண்மையான காதல் 
ஆண் - பெண் 20 வயதுக்குமேல் நல்ல கல்வி, உலக அறிவு ஏற்பட்டபின், தங்கள் பிரச்சனைகளை தாங்களே நிவர்த்தி செய்து கொள்கிற தன்னம்பிக்கை, தெளிவு, பக்குவம் இவை அனைத்தும் இரு பாலருக்கும் வந்தபின் ஏற்படுவதே உண்மையான காதல் ஆகும். இதுவே சுதந்திரமானதுமாகும்       - தந்தை பெரியார்
 
            காதல் என்பதன் வரையறை
     காதல் என்பது என்ன பொருள் என்றெல்லாம் நாம் ஆய்வுசெய்ய தேவையும் இல்லை, அவசியமும் இல்லை. ஒருவர் தன் வாழ்க்கைத் துணையை தானே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமைக்கு பெயர் “காதல்”. என்பதுதான்  தமிழ்நாடு காதலர் கழகத்தின் வரையறை.

            காதல் திருமணங்களை ஆதரிப்பது ஏன்?

    காதல் திருமணங்களால் சாதி, மத உணர்வுகளைத் தகர்த்து, சதி கொடுமை, மத மோதல்கள் தவிர்த்து, ஆரோக்கியமான சமநிலை சமுதாயம் உண்டாவதற்கு காதல் உறுதுனையாக இருக்கிறது. பெண்களுக்கு காதலால் சுயசிந்தனை, தானாக முடிவெடுக்கும் தன்மை, தன்னம்பிக்கை, தைரியம் ஆகியவை வளர்கிறது.

             தமிழ்நாடு காதலர் கழகத்தின் நோக்கம்

     காதல் செய்பவர்கள், காதல் திருமணம் செய்தவர்கள், காதலை ஆதரிப்பவர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து, சமூக
     அக்கரையுள்ள ஒரு பெரிய அமைப்பாக மாற்றுதல்,

     சாதிகள் ஒழிவதற்காகவும், பெண்ணுரிமை கிடைப்பதற்காகவும், காதல் திருமணங்களை வலியுறுத்தி பிரச்சாரம் செய்தல்,

      தங்கள் வாழ்க்கைத் துணைவரை தாங்களே தேர்வுசெய்யும் உரிமை அனைவருக்கும் உண்டு. அவ்வாறு தேர்வு செய்யும்
     போது, ஏற்படும் சிக்கல்களை தீர்ப்பதற்கு துணை நிற்பது.


           விரைவில் துவக்கம்


 விரைவில் துவங்க இருக்கும் இந்த தமிழ்நாடு காதலர் கழகத்தில், காதலை ஆதரிக்கும் அனைவரும் இணையுங்கள்.

    உங்களுடைய ஆதரவுகளையும், ஆலோசனைகளையும் வழங்க தொடர்பு மின்னஞ்சல் :
kathalarkazhakam@gmail.com,
       
வலைப்பூ முகவரி : www.kathalarkazhakam.blogspot.com,